திருநெல்வேலி | பற்களை பிடுங்கியதாக எழுந்துள்ள சர்ச்சை: கல்லிடைக்குறிச்சி போலீஸாரிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அம்பாசமுத்திரத்தில் உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர்சிங் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. ஜமீன் சிங்கம்பட்டியில் கண்காணிப்பு கேமராவை உடைத்ததாக, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரை போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரது பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமதுசபீர் ஆலத்துக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 3 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் விசாரணையின்போது, தான் கீழே விழுந்ததில்தான் பற்கள் உடைந்ததாகவும், போலீஸார் பற்களை பிடுங்கவில்லை என்றும் சூர்யா பிறழ் சாட்சியம் அளித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சூர்யா விசாரிக்கப்பட்டபோது அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆபிகராம் ஜோசப், தலைமைக் காவலர், 2 பெண் காவலர்களிடம், விசாரணை அதிகாரியான முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி யுள்ளார். இதனிடையே சார் ஆட்சியரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட செல்லப்பா தரப்பு சம்மன் வாங்க மறுத்துவிட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

சார் ஆட்சியர் அறிவிப்பு: சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு: கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற வழக்கு எண் 69-2023 தொடர்பான விசாரணையின்போது, தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் துன்புறுத்திய தாக சமூக ஊடகங்களில் வரப்பெற்ற புகாரின் பேரில், சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் மற்றும் சார் ஆட்சியரை விசாரணை அலுவலராக நியமனம் செய்து, மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது இது தொடர்பாக சாட்சியம் தெரிவிக்க விரும்பும் நபர்கள் வரும் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர்முன் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் தங்களது எழுத்து பூர்வமான மனுவை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE