வேலூர் கோட்டைக்கு இளைஞருடன் வந்த மாணவியை சீண்டிய 7 பேர் கைது

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் கோட்டையை சுற்றிப்பார்க்க இளைஞர் ஒருவருடன் ஹிஜாப் அணிந்த மாணவி ஒருவர் கடந்த 27-ம் தேதி சென்றுள்ளார். கோட்டை மதில் சுவர் பகுதியில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற இளைஞர்கள் சிலர் மாணவி அணிந்திருந்த ஹிஜாபை கழற்றக்கூறி மிரட்டல் விடுத்தனர். அதை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்ததுடன் சமூக வலைதளங்களில் பரப்பினர்.

இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வட வேலூர் கிராம நிர்வாக அலுவலர்ஜோஷ் சுரேஷ் ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில், 153ஏ, 504, பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக இர்பான் பாஷா(22), இப்ராஹிம் (24), அஷ்ரப் பாஷா(20), முகமது பயாஸ்(22), பிரசாந்த் (20), சந்தோஷ் (22) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 7 பேரை நேற்று கைது செய்தனர்.

இதுதொடர்பாக, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பொது இடங்களில் தனிமனித உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யார் மிரட்டினாலும் அவர்கள் மீது காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக இந்த விடியோவை யாரும் பயன்படுத்த வேண்டாம். வீடியோவை பரப்பவும் கூடாது. அதையும் மீறி பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ எதற்காக எடுத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட கண்காணிப்பாளர், உட்கோட்ட துணை கண்காணிப்பாளர், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் கோட்டையை சுற்றிலும் ஒட்டப்படும். ஒரு சிலர் செய்யும் தவறுதான் அச்சப்படும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE