மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ.2,500 லஞ்சம்: சோழவந்தான் அருகே பொறியாளர் கைது

By என். சன்னாசி

மதுரை: சோழவந்தான் அருகே மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கியதாக இளநிலை மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகிலுள்ள விக்கிரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக பணியாற்றியவர் குணசேகரன் (56). காடுபட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் முத்துக்கணேஷ். இவர், தனது தாய் பேச்சி பெயரிலுள்ள வீட்டுக்கான மின் இணைப்பை மாற்றம் கோரி 2 மாதத்திற்கு முன்பு குணசேகரனை அணுகினார். இதற்கு அவர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இந்நிலையில், லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத முத்துக்கணேசன் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் யோசனையின்படி, ரசாயன பவுடர் தடவிய ரூ.2,500-ஐ விக்கிரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் வைத்து குணசேகரனிடம் முத்துக்கணேஷ் கொடுத்தார். அருகில் மறைந்திருந்த டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் காவல் ஆய்வாளர் பாரதிபிரியா அடங்கிய போலீஸார் குணசேகரன் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2,500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக அந்த அலுவலகத்தில் பணிபுரியும் 2 ஊழியர்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE