மதுரை அருகே கறிக்கடை வியாபாரி வீட்டில் பாட்டில் குண்டு வீசியதாக சிறுவன் உட்பட 3 பேர் கைது

By என்.சன்னாசி

மதுரை: மதுரை அருகே கறிக்கடை வியாபாரியின் வீட்டில் பாட்டில் குண்டு வீசியதாக சிறுவன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜா முகமது. அதே ஊரில் கறிக்கடை நடத்துகிறார். நேற்று இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டுக்கு வெளியில் திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. ராஜா முகமது எழுந்து பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் திரைச்சீலை தீயிட்டு எரிந்தது. அவரது வீட்டின் மீது பாட்டில் குண்டுகள் வீசியிருப்பது தெரிந்தது. இது பற்றி மேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

மேலூர் டிஎஸ்பி ஆர்லிஸ் ரெபோனி, காவல் ஆய்வாளர் மன்னவன் உள்ளிட்ட சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விசாரணையில், பாட்டிகளில் மண்ணெணணெய் நிரப்பிய ராஜா முகமது வீட்டில் வீசியிருப்பது தெரியவந்தது. மேலும், அங்கு வந்த தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். எஸ்பி சிவபிரசாத் சம்பவ இடத்தை பார்த்து விசாரணை நடத்தி சென்றார்.

ராஜா முகமது கொடுத்த புகாரில், நேற்று மாலை ரம்ஜானையொட்டி குடும்பத்தினருடன் பள்ளி வாசலுக்கு டூவீலரில் சென்று திரும்பியபோது, எதிரே மற்றொரு டூவீலரில் வந்த 3 பேர் தங்கள் மீது மோதினர். அவர்களை தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. அந்த நபர்கள் மீது சந்தேகிப்பதாக கூறியிருந்தார். ஆய்வாளர் மன்னவன் விசாரணையில், ராஜா முகமது தகராறு செய்த ஆத்திரத்தில் திருவாதவூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (25), ஆனந்தன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் குண்டு வீச்சில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE