தி.மலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் நுழைந்து கலாட்டா செய்த இளைஞர் சிக்கினார்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்து கலாட்டா செய்த இளைஞரால் பதற்றமான சூழல் நிலவியது. தி.மலை அண்ணாமலையார் கோயிலில் வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தர்களின் கூட்டம் இருக்கும்.

குறிப்பாக, விடுமுறை நாட்கள், சிறப்பு விசேஷ நாட்களில் கூட்டம் சற்றும் அதிகமாகவே இருக்கும். நேற்று யுகாதி பண்டிகை என்பதால் பக்தர்கள் கூட்டம் நேற்று காலையில் இருந்தே அதிகமாக இருந்தன. கோயிலின் ராஜகோபுரம் வழியாக பெரும்பாலான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

அதேநேரம், திரு மஞ்சன கோபுரம் வழியாகவும் பக்தர்கள் சிலர் வருவார்கள். அங்கு குறைந்த அளவிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

இந்நிலையில், திருமஞ்சன கோபுரம் வழியாக கையில் வெட்டுக் கத்தியுடன் நுழைந்த இளைஞர் ஒருவர் பக்தர்களை மிரட்டியபடி கோயிலுக்குள் சென்றார். கத்தியுடன் இருந்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. திடீரென அவர் கோயில் நிர்வாக அலுவலகத்துக்குள் நுழைந்தவர் அங்கிருந்து பொருட்களையும், கண்ணாடி உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினார்.

இதனால், நிர்வாக அலுவலகத்தில் இருந்த வர்கள் அங்கிருந்து சிதறி ஒடினர். அலுவலக நாற்காலியில் கத்தியுடன் அமர்ந்து சிறிது நேரம் கலாட்டா செய்தவரை கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் உதவியுடன் மடக்கி பிடிக்கப்பட்டார்.

மது போதையில் இருந்த அவரிடம் விசாரணை செய்ததில், அவர் பெங்களூருவைச் சேர்ந்த அப்பு என்றும் தன்னுடைய காதலியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு தி.மலை வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், மாறி மாறி உளறி வருவதால் அவரை தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கோயில் வளாகத்துக்குள் கத்தி யுடன் நுழைந்து கலாட்டா செய்த நபரால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE