தஞ்சை நிறுவனத்தில் ரூ.1,000 கோடி மோசடி: தலைமறைவான 3 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

By கி.மகாராஜன் 


மதுரை: இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் போலீஸார் தேடி வரும் 3 பேரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தஞ்சாவூர் ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் கம்பெனியை நடத்தி வந்தார். இவர் தங்கள் கம்பெனியில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.11 ஆயிரம் வீதம் வழங்குவதாக கூறியுள்ளார். இதை நம்பி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். 2020 பிப்ரவரி மாதம் வரை முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மேலாளர் நாராயணசாமி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் அப்துல்கனி, கமாலுதீன், நாராயணசாமி ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.

கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், “இதுவரை ரூ.410 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக 6500-க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் மனுதாரர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மனுதாரர்கள் கம்பெனியில் இருந்து 57 ஆம்னி பேருந்துகள் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை முடக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. வங்கி கடனுக்காக வங்கிகளும் சில ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர். மக்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை மனுதாரர்கள் மோசடி செய்துள்ளனர். மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம். எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது” என்றார்.

இதனையடுத்து நீதிபதி, முதல் மனுதாரர் அப்துல்கனி பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.31.99 கோடிக்கு மேல் எடுத்துள்ளார். ரஹானாபேகம் பல்வேறு வங்கிகளில் ரூ.1.55 கோடி எடுத்துள்ளார். 3வது மனுதாரர் மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவர்தான் முதலீட்டாளர்களின் அனைத்து கணக்குகளையும் பராமரித்துள்ளார்.

மனுதாரர்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரம் கோடி வரை மோசடி செய்துள்ளனர். இதனால் மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். முன்ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE