திருச்சி அருகே பாலசமுத்திரத்தில் அரசுப் பள்ளி மாணவர் கொலை வழக்கில் சக மாணவர்கள் 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி அருகே பாலசமுத்திரம் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சக மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பணியில் அலட்சியமாக இருந்ததாக தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது, விளையாட்டாக சிறிய கற்களை வீசியது தொடர்பாக, தோளூர்பட்டியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கோபி மகன் மவுலீஸ்வரன்(15) என்ற மாணவருடன் சக மாணவர்கள் 3 பேர் தகராறு செய்ததுடன், அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மவுலீஸ்வரன், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தகவலறிந்த மவுலீஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், இதுதொடர்பாக 3 மாணவர்களையும் தொட்டியம் போலீஸார் கைது செய்து, திருச்சியில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். அத்துடன், பணியில் அலட்சியமாகவும், மெத்தனப் போக்குடனும் நடந்து கொண்டதாக பள்ளித் தலைமை ஆசிரியை ஈஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ராஜேந்திரன், மற்றொரு ஆசிரியை வனிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி நேற்று உத்தரவிட்டார்.

மாணவர் மவுலீஸ்வரனின் சொந்த ஊரான தோளூர்பட்டியில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. இதில், முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் பங்கேற்று, மாணவரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

அமைச்சர் இரங்கல்: உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE