சென்னை | ஓடும் பேருந்தில் செல்போன் திருட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவரிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் சாலமன்(19). கல்லூரி மாணவரான இவர் கடந்த மாதம் 24-ம் தேதி வட பழனியிலிருந்து பெசன்ட் நகர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரது செல்போனை மர்ம நபர் ஒருவர் திடீரென திருடிக் கொண்டு அவரது கூட்டாளியுடன் பேருந்தில் இருந்து இறங்கி ஓட முயன்றார். சுதாரித்துக் கொண்ட சாலமன் சத்தம் போடவே, சக பயணிகள் இருவரையும் பிடிக்க முயன்றனர். இதில், ஒருவர் பிடிபட்டார்.

மற்றொருவர் தப்பினார். பிடிபட்ட நபர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சூர்யகுமார்(22) என்பதும், தப்பிச்சென்றது அவரது உறவினரான சுரேஷ் என்பதும் தெரியவந்தது.

இருவரும் சேர்ந்து கூட்டமாக செல்லும் பேருந்தில் பயணித்து, பொதுமக்களின் செல்போன்களை திருடுவதும், பின்னர் திருடியசெல்போன்களை சுரேஷின் மனைவி கவிதாவிடம் கொடுத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து சூர்யகுமார், சுரேஷின் மனைவி அதே பகுதியைச் சேர்ந்த கவிதா(19) ஆகிய இருவரை கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 16 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE