சென்னை விமான நிலையத்தில் ரூ.2.83 கோடி மதிப்பிலான 5,782 கிராம் தங்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: துபாய், மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் ரூ.2.83 கோடி மதிப்பிலான 5,782 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் மேத்யு ஜாலி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவல்: துபாயிலிருந்து மார்ச் 2ம் தேதியன்று, சென்னை வந்த விமானத்தில், சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 1.52 கோடி மதிப்பிலான 3,120 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருக்கைகளுக்கு அடியில் பசை வடிவில் இரண்டு பாக்கெட்டுகளில் தங்கத்தை பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், மலேசியாவிலிருந்து வந்த ஒரு ஆண் பயணியை பரிசோதித்ததில் ரூ.98.04 லட்சம் மதிப்பிலான 2,000 கிராம் எடை கொண்ட தங்கம் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு பயணியை பரிசோதித்ததில், 422 கிராம் எடைகொண்ட 2 தங்கச் சங்கிலிகள், 240 கிராம் எடைகொண்ட 6 வளையல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 31.46 லட்சம். மொத்தம் ரூ.2.83 கோடி மதிப்பிலான 5,782 கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE