கோவை | காரமடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,244 டெட்டனேட்டர், 622 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் - 8 பேர் கைது

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகள் ஆகியவற்றை போலீஸார் இன்று (மார்ச் 1) பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 8 பேரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடையில் புகழ்பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான அரங்கநாதர் சுவாமி கோயில் உள்ளது. நடப்பாண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்ட திருவிழா காலகட்டங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வர்.

மேலும், அரங்கநாதர் சுவாமி கோயிலில் தேர்த்திருவிழா தொடங்கியதைத் தொடர்ந்து காரமடை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மாவட்ட போலீஸார் தங்களது கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியிருந்தனர். முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காரமடையில் உள்ள கண்ணார்பாளையம் பிரிவு பகுதியில் காரமடை போலீஸார் இன்று (மார்ச் 1) காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே இரண்டு இருசக்கர வாகனங்களில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த நான்கு நபர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அதில் பிடிபட்ட நபர்கள் வைத்திருந்த இரு பைகளில் 26 கட்டுகள் கொண்ட 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் ஆகியவை இருந்தது தெரிந்தன.

அதிர்ச்சியடைந்த போலீஸார் அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் பிடிபட்டவர்கள் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த தினேஷ்(23), ஆனந்த்(25), காரமடையைச் சேர்ந்த சுரேஷ்குமார்(41), திருவாரூரைச் சேர்ந்த செந்தில்குமார்(43) எனத் தெரிந்தது. மேலும், காரமடையைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவர் எலெக்ட்ரிக் டெட்டனேட்டரை அதிக விலைக்கு கேரளாவுக்கு விற்று வருவதும் தெரிந்தது.

இதையடுத்து ரங்கராஜை பிடித்து போலீஸார் விசாரித்தனர். காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார். அதில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸார் கூறும்போது, ‘‘சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் ரங்கராஜிடம்(46) வேலை செய்து வருகின்றனர். ரங்கராஜ் பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வெடிபொருட்களை எவ்வித உரிமையும் இன்றி சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இவ்வாறு தான் பயன்படுத்தும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களில் சிலவற்றை அதிக விலைக்கு கேரளாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். ரங்கராஜிடம் விசாரித்ததன் அடிப்படையில் அவர் பதுக்கி வைத்திருந்த 622 ஜெலட்டின் குச்சிகள், 350 எலெக்ட்ரிக் டெட்னேட்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வெடிபொருட்களை சிறுமுகையைச் சேர்ந்த பெருமாள்(60), அன்னூரைச் சேர்ந்த கோபால்(58), காரமடையைச் சேர்ந்த சந்திரசேகரன்(58) ஆகியோரிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.

இவர்களையும் பிடித்து விசாரித்து வருகிறோம். இதுவரை இந்த வழக்கில் தினேஷ், சுரேஷ்குமார், செந்தில்குமார், ஆனந்த், ரங்கராஜ், பெருமாள், கோபால், சந்திரசேகரன் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்துள்ளனர். பிடிபட்டவை பாறை தகர்க்க, கிணறு தோண்ட பயன்படுத்தப்படுவவை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் இதை என்ன நோக்கத்துக்காக, யாருக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கப்பட்டிருந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

சதிச்செயல் உள்ளதா எனவும் விசாரணை: பண்டிகை சமயத்தில் மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு மேற்கண்ட எலெக்ட்ரிக் டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

8 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்