சேலத்தில் ரூ.65 லட்சம் மதிப்பிலான 122 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் - 4 கொள்ளையர்கள் பிடிபட்டதன் பின்னணி

By வி.சீனிவாசன்

சேலம்: சேலம் அருகே காரை வழிமறித்து ரூ.65 லட்சம் மதிப்புள்ள 122 கிலோ வெள்ளியை கொள்ளையடித்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த நால்வரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து வெள்ளி, ஆறு சொகுசு கார்கள், செல்போன்களை மீட்டு நடவடிக்கை எடுத்தனர். குற்றவாளிகளை கைது செய்து வெள்ளியை மீட்டெடுத்த போலீஸாரை எஸ்.பி சிவக்குமார் பாராட்டினார்.

சேலம் டவுன் கோட்டை பகுதி சேர்ந்த வெள்ளி வியாபாரி சாந்தாஜு ஜெகத். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி தனது நண்பர்கள் சாகர் ஸ்ரீராம், சந்தோஷுடன் காரில் ராய்ப்பூருக்கு சென்று, அங்கிருந்து ரூ.69 லட்சம் மதிப்பிலான 129 கிலோ வெள்ளி கட்டிகளை வாங்கிக் கொண்டு காரில் ஊர் திரும்பினார். சேலம் அருகே ஓமலூர் ஆர்.செட்டிப்பட்டி மேம்பாலத்தில் கார் வந்தபோது, மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சாந்தாஜு ஜெகத் உள்ளிட்டவர்களை மிரட்டி, வெள்ளிப் பொருட்களுடன் காரை கடத்தி சென்றனர்.

ஓமலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தனிப்படை போலீஸார் ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் வெள்ளி கடத்தல் கும்பலை தேடி வந்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கேரளா மற்றும் கோவையை சேர்ந்த 16 பேரை, கடந்த டிசம்பர் மாதம் போலீஸார் கைது செய்து, 7 கிலோ வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட மேலும் 4 பேரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் ஒரு காரை திருடி சென்ற கும்பலை, சேலம் மாவட்ட போலீஸார் மடக்கி பிடித்து சித்தோடு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களில் கோடாலி ஜெயந்த் (45), டைட்டஸ் (33), சந்தோஷ்(39), விபுன் (31) ஆகிய 4 பேரும் 129 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்பு உடையவர்கள் என தெரியவந்தது.

இதை அறிந்த சேலம் மாவட்ட தனிப்படை போலீஸார் நான்கு பேரையும் கடந்த 20-ம் தேதி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் காருடன் ரூ.65 லட்சம் மதிப்பிலான 122 கிலோ வெள்ளி கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வெள்ளிக் கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட 6 சொகுசு கார்கள், 5 செல்போன்கள், இரும்பு பைப் ஆகியவற்றை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்தக் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாரை சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். அதேபோல, சேலம் எஸ்பி சிவக்குமார் குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை பாராட்டினர்.

அவர் கூறும்போது, ‘இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மிகவும் வசதி படைத்தவர்கள். வெள்ளிக் கட்டிகளுடன் கடத்தப்பட்ட காரை பொள்ளாச்சி பகுதியில் ஒரு பண்ணை வீட்டு பகுதியில் பல்வேறு செடி, கொடிகளை போட்டு மறைத்து வைத்திருந்தனர். காவலில் எடுக்கப்பட்டவர்கள் கூறிய தகவலைத் தொடர்ந்து, சோதனை செய்து, பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE