பீங்கான் பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்... ரூ.2 லட்சம் நஷ்டம்... - தஞ்சை சாலையோர வியாபார தம்பதியர் புலம்பல்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சாலையோரத்தில் விற்க வைத்திருந்த பீங்கானால் வடிவமைக்கப்பட்ட அலங்காரப் பொருட்களை நள்ளிரவில் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி, தீ வைத்து கொளுத்தியதால், பாதிக்கப்பட்ட வியாபாரம் செய்யும் தம்பதியினர் அழுது புலம்பி வருகின்றனர்.

தஞ்சாவூர் சச்சிதானந்த மூப்பனார் சாலையில் சாலையோரத்தில் பீங்கானால் செய்யப்பட்ட ஊறுகாய் ஜாடிகள், உப்பு ஜாடிகள், அகல் விளக்குகள், அலங்கார பொம்மைகள் ஆகியவற்றை கடந்த ஒரு வார காலமாக, கும்பகோணம் அருகே மாங்குடி நடுவக்கரையைச் சேர்ந்த ராஜா - மாரியம்மாள் தம்பதியினர் விற்பனை செய்து வந்தனர்.

சாலையோரத்தில் பகலில் வியாபாரம் செய்யும் அவர்கள், அதே இடத்தில் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு, இரவு அங்கேயே தங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு தங்களது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதால், ராஜா, மாரியம்மாள் இருவரும் நேற்று இரவு பீங்கான் பொருட்களை அதே இடத்தில் சாக்குகளை கொண்டு கட்டி வைத்துவிட்டு சொந்த ஊர் சென்றனர். இதையடுத்து இன்று காலை அவர்கள் மீண்டும் வியாபாரம் செய்ய தஞ்சாவூர் வந்து பார்த்தபோது, பீங்கான் பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அழுது புலம்பினர்.

பின்னர் அருகில் உள்ள தெற்கு காவல் நிலையத்துக்கு சென்ற அவர்கள், பீங்கான் பொருட்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டது குறித்து போலீஸாரிடம் கூறியுள்ளனர். அதற்கு போலீஸார், சாலையோரத்தில் உள்ள பொருட்களுக்கு எல்லாம் நாங்கள் பாதுகாப்பு தர முடியாது என கூறிவிட்டனராம்.

இதையடுத்து இன்று நாள் முழுவதும் சேதமான பீங்கான் பொருட்களை பார்த்து அழுது புலம்பியபடி இருந்தனர். இதுகுறித்து ராஜா - மாரியம்மாள் தம்பதியினர் கூறுகையில், ”நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஊர் ஊராக சென்று பீங்கான் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். டெல்லியிலிருந்து வரவழைக்கப்படும் இந்த பொருட்களை விருத்தாசலத்திலிருந்து மொத்த வியாபாரிடம் வாங்கி வந்து சில்லரையாக விற்பனை செய்து வருகிறோம். சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களும், எங்களது துணிகள், சமையல் பொருட்களும் வைத்திருந்தோம்.

குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என தகவல் வந்ததால், நாங்கள் நேற்று இரவு பீங்கான் பொருட்களை அப்படியே சாக்குகளை வைத்து போர்த்தி கட்டி வைத்துவிட்டு சென்றுவிட்டோம். ஆனால் மர்ம நபர்கள் யாரோ, எங்களது பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். எங்களுடைய முதலீடு அனைத்தும் வீணாகிபோய்விட்டது. நாங்கள் என்ன செய்வது எனத் தெரியவில்லை” என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்