சேலம் அருகே இரு பைக்குகள் மீது லாரி மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

By வி.சீனிவாசன்

சேலம்: ஜலகண்டாபுரம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரை ஜலகண்டாபுரம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடை கிராமத்தில் தேங்காய் பாரம் ஏற்றிய லாரியானது, தாரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை காட்டுராஜா (31) என்பவர் ஓட்டி வந்த நிலையில், செலவடை கூட்டுறவு சொசைட்டி அருகே உள்ள தரைபாலத்தில் லாரி சென்ற போது, இரண்டு இரு சக்கர வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த சாந்தி (35), பாலகிருஷ்ணன், யுவஸ்ரீ (ஒன்றரை வயது) மற்றும் சந்தோஷ (15) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மேட்டூரை சேர்ந்த வசந்தகுமார் (38), எடப்பாடியை சேர்ந்த இந்துமதி (23) இருவரும் சேலம் அரசு அரசு மருத்துவமனையில் தீவிர அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சேலம் எஸ்பி சிவக்குமார் சம்பவ இடம் விரைந்து சென்று, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி, விபத்துக்கான காரணம் குறித்து நேரடி விசாரணையில் ஈடுபட்டார். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மது அருந்திய நிலையில் வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. லாரி ஓட்டுநர் காட்டுராஜாவை ஜலகண்டாபுரம் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE