திருச்சியில் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு: 5 பேருக்கு தீவிர சிகிச்சை

By அ.வேலுச்சாமி

திருச்சி: திருச்சியில் திருட்டு வழக்கில் நகை பறிமுதலுக்காக அழைத்துச் சென்றபோது, போலீஸாரை அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ரவுடிகள், ஒரு இன்ஸ்பெக்டர், 2 காவலர்கள் உட்பட 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

30 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை: திருச்சி உறையூர் சீனிவாச நகர் 7-வது மெயின்ரோடு 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சி.அறிவழகன். பெல் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மகள் டாக்டர் தேன்மொழிக்கு திருமணமாகி விட்டது. பிஇ படித்துள்ள இவரது மகன் பாலமுருகன் பெங்களூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு பெண் பார்ப்பதற்காக கடந்தாண்டு ஜூன் 12-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு அறிவழகனும், அவரது மனைவியும் தங்களது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் தழுதாழைமேடு கிராமத்துக்குச் சென்றனர். பின்னர் ஜூன் 17-ம் தேதி மீண்டும் திருச்சிக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்தது. உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த மோதிரங்கள், வளையல்கள், தங்கச் சங்கிலிகள், நெக்லஸ், தோடு, மாட்டல் உட்பட 30 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அறிவழகன் அளித்த புகாரின்பேரில் உறையூர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

திருச்சியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதியை பார்வைியிட்ட மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா

தனிப்படை அமைக்க உத்தரவு: இந்நிலையில், அண்மையில் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற எம்.சத்தியபிரியா மாநகர காவல் நிலையங்களில், நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளிலும் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தினார். மேலும் நிலுவையிலுள்ள முக்கிய கொலை, கொள்ளை வழக்குகளுக்கு தனிப்படை அமைத்தும் உத்தரவிட்டிருந்தார்.

இரண்டு ரவுடிகள் கைது: அதனடிப்படையில் அறிவழகன் வீட்டில் நடைபெற்ற திருட்டு வழக்கைக் கண்டறிய உறையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் புத்தூர் வண்ணாரப்பேட்டை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ரவுடிகளான துரை (எ) துரைசாமி (40), அவரது தம்பி சோமு (எ) சோமசுந்தரம் (38) ஆகியோருக்கு இவ்வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி துரை

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் துரை, சோமு ஆகிய இருவரையும் திங்கட்கிழமை காலை கைது செய்து, திருட்டு வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக ஜீப்பில் உய்யக்கொண்டான் கரை பகுதியிலுள்ள குழுமாயி அம்மன் கோயில் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். தலைமைக் காவலர் சந்திரசேகர் ஜீப்பை ஓட்டினார். இன்ஸ்பெக்டர் மோகன், காவலர்கள் சிற்றரசு, அசோக் ஆகியோரின் அவர்களை அழைத்துச் சென்றனர். இருவரும் ஓட்டுநருக்கு பின்வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட்டம்... - குழுமாயி அம்மன் கோயில் கரைக்கு அருகே சென்றபோது, ரவுடி துரை திடீரென ஓட்டுநர் சந்திரசேகரின் கழுத்தைப் பிடித்து அழுக்கி, ஜீப்பின் ஸ்டியரிங்கை வளைத்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், பக்கவாட்டிலுள்ள முள்வேலியில் மோதி நின்றது. இதனால் ஜீப்பில் இருந்த போலீஸார் நிலைகுலைந்தனர். அப்போது தங்களிடமிருந்து பறிமுதல் செய்து ஜீப்பில் வைக்கப்பட்டிருந்த அரிவாள் மற்றும் கத்தியை எடுத்துக் கொண்டு ரவுடிகள் துரை, சோமு ஆகிய இருவரும் தப்பியோடினர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி சோமு

அரிவாள் வெட்டு, துப்பாக்கிச்சூடு.... - இதைக்கண்ட இன்ஸ்பெக்டர் மோகன் தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு, தப்பிக்க முயன்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் இருவரும் தப்பித்து ஓடினர். அவர்களைத் தடுத்தபோது காவலர் சிற்றரசுவின் வலது கையில் ரவுடி துரையும், காவலர் அசோக்கின் இடது கையில் ரவுடி சோமுவும் அரிவாளால் வெட்டினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட இன்ஸ்பெக்டர் மோகன் தனது துப்பாக்கியால் ரவுடி துரையை நோக்கி சுட்டார். இதில் ரவுடி துரையின் முழங்காலில் குண்டு பாய்ந்தது. இதைக்கண்ட ரவுடி சோமு தனது கையிலிருந்த கத்தியால் இன்ஸ்பெக்டரின் வலது தோள்பட்டையில் கிழித்தார். அதைத்தொடர்ந்து அவரை நோக்கியும் இன்ஸ்பெக்டர் மோகன் துப்பாக்கியால் சுட்டார். இதில் ரவுடி சோமுவின் இடது முழங்காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை.... -அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மோகன் இதுகுறித்து மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் ஏராளமான போலீஸார் அங்குசென்று காயத்துடன் இருந்த இன்ஸ்பெக்டர் மோகன், காவலர்கள் சிற்றரவு, அசோக், ரவுடிகள் துரை, சோமு ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இன்ஸ்பெக்டர், காவலர்களிடம் நலம் விசாரித்த துணை ஆணையர் அன்பு

2 ரவுண்டு சுடப்பட்டது.... தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் துரை, சோமு ஆகியோர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அவைதொடர்பாக தனிப்படை போலீஸார் இவர்களைத் தேடி வந்தனர். இன்று காலை கைது செய் நகை பறிமுதலுக்காக அழைத்துச் சென்றபோது, திடீரென போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

இதனால் இன்ஸ்பெக்டர் 2 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றம் மூலம் தண்டனைப் பெற்றுத்தரவே விரும்புகிறோம். ஆனால் அவர்கள் போலீஸாரைத் தாக்கினால், கடும் நடவடிக்கை எடுப்போம். இதில் எந்த நாடகமும் இல்லை. இது ரவுடிகளுக்கு ஒரு எச்சரிக்கையான செயல்' என்றார். அப்போது துணை ஆணையர்கள் அன்பு, சுரேஷ்குமார், ஸ்ரீதேவி, நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் முள்வேலியில் மோதி நிற்கும் போலீஸ் ஜீப்

துரை மீது 64; சோமு மீது 21 வழக்குகள்: காவல் அதிகாரிகள் கூறும்போது, 'இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட ரவுடி துரை மீது திருச்சி, புதுக்கோட்டை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் 64 வழக்குகள் உள்ளன. இதில் திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி இளவரசனை புதுக்கோட்டை புதுக்குளம் பகுதியில் கொலை செய்த வழக்கு உட்பட 5 கொலை வழக்குகள் அடங்கும். இவரது தம்பி சோமு, 2 கொலை வழக்குகள் உட்பட 21 வழக்குகளில் தொடர்புடையவர். இவர்கள் குணமடைந்த பிறகு, மீண்டும் அந்த பகுதிக்கு அழைத்துச் சென்று பதுக்கி வைத்துள்ள நகைகளை மீட்கும் பணி நடைபெறும்' என்றனர்.

ரவுடி துரை போலீஸாரை தாக்குவதற்கு பயன்படுத்திய அரிவாள்

இதற்கிடையே ரவுடிகள் துரை, சோமு ஆகிய இருவரையும் அவரது உறவினரான அனுராதா என்பவரது வீட்டில் தனிப்படை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தவுடன், அவர்களை போலீஸார் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதைத் தடுத்து நிறுத்தி மகன்களை மீட்டுத்தருமாறு அவர்களது தாயார் மல்லிகா மாநகர காவல் ஆணையருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE