ஸ்ரீவில்லி.யில் குலதெய்வ கோயில் சென்ற எஸ்ஐ வீட்டில் 30 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு

By செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் எஸ்.ஐ. வீட்டில் 30 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் கோமதிநாயக கண்ணன்(40). இவர் 11-வது பட்டாலியனில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு கிருஷ்ணன்கோவில் அருகே குன்னூரில் உள்ள குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்றார். நேற்று காலை வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடுபோனது தெரிய வந்தது.

அதேபோல், ராஜீவ் காந்தி நகர் 11-வது தெருவில் கடந்த டிசம்பரில் உயிரிழந்த ஹவில்தார் முத்துமகேஸ்வரன் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கு நகை, பணம் இல்லாததால் பொருட்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து அடுத்த தெருவில் உள்ள தலைமை ஆசிரியர் பொன்லெட்சுமி வீட்டின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள், அதற்கு அடுத்திருந்த உள் கதவை உடைக்க முடியாததால் திரும்பிச் சென்றுவிட்டனர். இதனால், அந்த வீட்டிலிருந்த நகை, பணம் தப்பின.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தகவலறிந்து சென்ற டிஎஸ்பி சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE