விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மேலும் 2 பேரை காணவில்லை; முக்கிய நிர்வாகி கைது

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாலியல் அத்துமீறல், அடித்து துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏற்கெனவே காப்பக நிர்வாகியின் மனைவி உள்பட மேலும் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் வந்தது. மேலும், இக்காப்பகத்தில் இருந்த ஜபருல்லாவை காணவில்லை என்று சலீம்கான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செஞ்சி டி எஸ் பி பிரியதர்ஷினி தலைமையிலான கெடார் போலீஸார் விசாரணை மேற்கொண்டு ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உட்பட 203 பேரை மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது தொடர்பாக வந்த 2 புகாரின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி , அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் பிஜூ மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத், சதீஷ், பூபாலன், தாஸ் உள்ளிட்ட 9 பேர் மீதும் அனுமதியின்றி ஆசிரமம் நடத்தி வந்தது, ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, அடித்து துன்புறுத்தியது, ஆசிரமத்தில் இருந்தவர்களை வியாபார உள்நோக்கத்துடன் வெளிமாநிலத்திற்கு கடத்தியது உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் கெடார் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து நேற்று முன் தினம்வரை 8 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், போலீசாரின் அழைப்பை ஏற்று விழுப்புரம் 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நடுவர் அகிலா விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் அன்பு ஜூபின் பேபியிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபியை வரும் மார்ச் 2-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் அகிலா உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட அன்பு ஜூபின் பேபிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையிலேயே வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தென்காசி மாவட்டம், சங்கரன் கோயிலைச் சேர்ந்த நடராஜன் என்பவர் கெடார் போலீஸில் கொடுத்த புகாரில் பார்வையற்ற தன் மாமா மனைவி லட்சுமியம்மாள் (80) மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகன் முத்துவிநாயகம் (48) ஆகிய 2 பேரை 11.08.2021 ம் தேதி அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்ததாகவும், அதன்பின் பலமுறை பார்க்கவந்தும் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும், தற்போது காணாமல் போன இருவரையும் கண்டுபிடித்து தருமாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பெங்களூர் அருகே தொட்டாகுப்பி பகுதியில் உள்ள நியூ.ஏ.ஆர்.கே. விஷன் ஆஃப் இந்தியா என்ற பெயரில் இயங்கும் ஆசிரமத்திற்கு இக்காப்பகத்தில் இருந்த ஜபருல்லாவை அனுப்பியதாக கூறப்படுவதை விசாரிக்க டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான போலீஸார் பெங்களூரு விரைந்துள்ளனர்.

பின்னணி என்ன? - விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் வந்தது.

சலீம்கான் என்பவர், இக்காப்பகத்தில் சேர்த்த வயதான தனது மாமாவை காணவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாரும், வருவாய்துறையினரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் உரிய அனுமதியின்றி இந்த ஆசிரமம் நடைபெற்று வருவது தெரிய வந்தது. இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உட்பட 203 பேர் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE