மதுரையில் பல லட்சம் மதிப்புள்ள 950 கிலோ கஞ்சா பறிமுதல்

By என். சன்னாசி

மதுரை: மதுரையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 950 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, காவல்துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது.

மதுரை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தவேண்டும் என போலீஸாருக்கு சமீபத்தில் பொறுப்பேற்ற காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். இதற்காக தனிப்படை அமைத்தும் கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் கோச்சடை பகுதியில் நேற்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேக அடிப்படையில் அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்றை வழிமறித்து ஆய்வு செய்தனர். அதில் சுமார் 950 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மூட்டைகள் இருப்பது கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள், லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பிரபாகரன்(40), கோவையைச் சேர்ந்த செந்தில்பிரபு(35) ஆகியோரை கைது செய்தனர். வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக மேலும் இருவரை தேடுகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த ஆய்வாளர் பூமிநாதன் தலைமை யிலாக போலீஸாரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், துணை காவல் ஆணையர்கள் பாராட்டியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE