அல்காய்தா இயக்கத்தை சேர்ந்த 4 பேருக்கு 7 ஆண்டு சிறை: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபட சதி செய்து உறுப்பினர்களை சேர்த்த குற்றத்துக்காக அல் காய்தா அமைப்பைச் சேர்ந்த 4 பேருக்கு 7 ஆண்டு 5 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இந்திய துணைக்கண்ட அல்காய்தா இயக்கத்தைச் சேர்ந்த மவுலானா மொகத் அப்துல் ரஹ்மான் காஸ்மி, மொகத் ஆசிப், ஜாபர் மசூத், அப்துல் சமி ஆகியோர் நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபட அந்த அமைப்புக்கு உறுப்பினர்களை சேர்த்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி சஞ்சய் கனக்வால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில் அந்த நான்கு பேருக்கும் 7 ஆண்டு 5 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்ததாக அவர்களின் வழக்கறிஞர் அக்ரம் கான் தெரிவித்தார்.

குற்றவாளிகள் ஏற்கெனவே 7 வருடம் 3 மாத காலம் சிறையில் கழித்துள்ளதால், அந்த காலம் தண்டனையின் ஒரு பகுதியாக கருதப்படும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியதாக அவர்களது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், குற்றம்சாட்டப்பட்ட சையது முகமது ஜிஷான் அலி மற்றும் சபீல் அகமது ஆகியோரை இந்த வழக்கில் இருந்து நீதிபதி விடுவித்துள்ளதாக வழக்கறிஞர் அக்ரம் கான் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE