சேலம் | அயல்நாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மாற்றி மோசடி - கேரள நபரிடம்  விசாரணை

By வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் அயல்நாடுகளில் இருந்து வரும் அழைப்புகளை தகவல் திருட்டுக்காக உள்ளூர் அழைப்பாக மாற்றி மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்தவரை உளவுத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை, உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி நடந்து வருவதாக சென்னை உளவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. குறிப்பாக சேலத்தில் இருந்து அழைபேசி மோசடி நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஐபி அதிகாரிகள் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சேலம், கொண்டலாம்பட்டி, செல்வா நகரில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் பூட்டை அதிகாரிகள் உள்ளே சென்று ஆய்வு செய்தனர்.

அதிகாரிகளின் ஆய்வில் அந்த வீட்டில் 300 சிம்கார்டுகள், ரிசீவர்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. வீட்டு உரிமையாளரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 30 வயது இளைஞர் வீட்டை ரூ.6 ஆயிரத்துக்கு மாத வாடகைக்கு எடுத்து இருப்பதாகவும், அவர் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், மாதம் ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வதாக தகவல் தெரியவந்தது.

மேலும், சேலம் மெய்யனூரில் உள்ள மஜித் தெருவில் மணிகண்டன் என்பவர் வீட்டில் ஐபி அதிகாரிகள் நடத்திய சோதனையில், வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மாற்றியது தெரியவந்தது. அங்கிருந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஹைதர் அலி(40) என்பவரை பிடித்து ஐபி அதிகாரிகள் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் கடந்த ஆறு மாதமாக சேலத்தில் தங்கி வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மாற்றி மோசடியில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

அவரை கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் உளவுத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில், ஹைதர் அலி பின்னணியில் கேரளாவை சேர்ந்த ஒருவர் மூளையாக இயங்கி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் இதுசம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும் போது, ‘வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மாற்றுவதன் மூலம் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை டிராப் செய்து, தகவல் திருட்டில் ஈடுபடுவதும், இருவரின் அழைப்புகளை ஒட்டு கேட்பது, போட்டி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தகவல்கள் பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபடுவது உள்பட பல காரணங்களுக்காக வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மாற்றுகின்றனர்.

ஒரு வெளிநாட்டு அழைப்பை டிராப் செய்து, பின்னர், மீண்டும் அந்த அழைப்பை வெளிநாட்டு அழைப்பாக மாற்ற முடியாது. இதனால், அவை உள்ளூர் அழைப்பாக மாற்றப்படும். இந்த மோசடியால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த மோசடியில் ஈடுபட்டு சிக்கியவரிடம் தொடர் விசாரணை மூலம் தகவல் திருட்டுக்கான காரணம் குறித்தும், அதன் பின்னணி ரகசியங்கள் பற்றி அறிய முடியும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE