கோவையில் ரவுடி கொல்லப்பட்ட சம்பவத்தில் 7 பேர் கைது; இருவரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய நீதிமன்றம் அருகே ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை அழைத்து வரும்போது, தப்பிக்க முயன்ற இருவரை போலீஸார் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்.

கோவை கோவில்பாளையம் லட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் கோகுல் (23). ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கொலை வழக்கு தொடர்பாக ஜே.எம்.2-வது நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போடுவதற்காக கோகுல், தன் நண்பரான சிவானந்தாபுரத்தைச் சேர்ந்த மனோஜ் (22) என்பவருடன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு திங்கள்கிழமை வந்தார். கையெழுத்து போட்டுவிட்டு, நீதிமன்றத்தின் பின்பக்கம் வழியாக வெளியே வந்த கோகுலை, பின்தொடர்ந்து வந்த கும்பல் அவரை கழுத்தில் வெட்டிக் கொன்றனர். தடுக்க வந்த மனோஜையும் வெட்டிவிட்டு தப்பினர். இதில் மனோஜ் படுகாயமடைந்தார். நீதிமன்றம் அருகே நடந்த இச்சம்பவம் கோவையில் பரபரப்பைஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக, 5 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிந்தனர். காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் சந்தீஷ் தலைமையில் 6-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரத்தினபுரி பக்தவச்சலம் வீதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பழிக்கு பழிவாங்குவதற்காக உயிரிழந்த ஸ்ரீராமின் கூட்டாளிகளால், கோகுல் கொல்லப்பட்டது தெரியவந்தது. தலைமறைவான நபர்களை பிடிக்க தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தேடப்படும் நபர்கள் கோத்தகிரி கட்டப்பெட்டு சந்திப்பில் சுற்றுவதாக தனிப்படை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை (14-ம் தேதி) மதியம் தகவல் கிடைத்தது. கோத்தகிரி போலீஸாரின் உதவியுடன், தனிப்படை போலீஸார் கட்டப்பெட்டு பகுதியில் சுற்றிய காந்திபுரத்தைச் சேர்ந்த ஜோஷ்வா (23), ரத்தினபுரியைச் சேர்ந்த எஸ்.கவுதம் (24), கணபதியைச் சேர்ந்த எம்.கவுதம் (24), பீளமேட்டைச் சேர்ந்த பரணி சவுந்தர் (20), ரத்தினபுரியைச் சேர்ந்த அருண்குமார் (21), சூர்யா (23), டேனியல் (27) எனத் தெரிந்தது. அவர்களை கைது செய்து, வேனில் வைத்து கோவைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி அருகே வந்தபோது, கைது செய்யப்பட்ட ஜோஷ்வா, எஸ்.கவுதம் ஆகியோர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றனர். சுதாரித்த போலீஸார், அவர்களை காலில் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.

இருவரை சுட்டுப்பிடித்தோம்... - இதுதொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கோகுல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், குன்னூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் குன்னூருக்குச் சென்றனர். பின்னர், அக்கும்பல் உதகை சென்று விட்டு, கோத்தகிரி வழியாக தப்பிக்க முயன்றனர். சுதாரித்த நாங்கள் நீலகிரிபோலீஸார் உதவியுடன் கோத்தகிரியில் 7 பேரையும் கைது செய்தோம்.

அவர்களை கோவைக்கு அழைத்து வரும் போது, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி அருகே இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என ஜோஷ்வா, கவுதம் ஆகியோர் கட்டாயப்படுத்தினர். இதனால் போலீஸார் அவர்களை வேனிலிருந்து இறக்கி அழைத்துச் சென்றனர்.

அப்போது அங்குள்ள ஒரு புதரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்ஐ, யூசப்பை வெட்டிவிட்டு தப்ப முயன்றனர். வேறு வழியில்லாததால் எஸ்ஐ, இருளப்பன், இருவரையும் காலில் சுட்டுப் பிடித்தார். 4 ரவுன்ட் சுடப்பட்டது. அதில் 2 ரவுன்ட் குண்டுகள் ஜோஷ்வாவின் வலது பக்க காலிலும், ஒரு குண்டு கவுதமின்ற இடதுகாலிலும் பாய்ந்தது. இருவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த எஸ்.ஐ யூசுப் சிகிச்சை பெற்று திரும்பினார்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE