சென்னை | நகைக்கடை கொள்ளையர்களை நெருங்கியது போலீஸ்: தனிப்படையினர் ஆந்திர மாநிலத்தில் முகாமிட்டு விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை போலீஸார் நெருங்கியுள்ளனர். இதற்காக தனிப்படை போலீஸார் ஆந்திராவில் முகாமிட்டுள்ளனர்.

சென்னை பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஜெயசந்திரன் (60). 2 மாடிகள் கொண்ட வீட்டில் இரண்டாவது தளத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். முதல் தளத்தில் ‘ஜே.எல்.கோல்ட் பேலஸ்’ என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இவரது நகைக்கடை ஷட்டரை காஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகைக்கடையில் இருந்த 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் மதிப்புடைய வைர நகைகளை கொள்ளையடித்து காரில் தப்பினர்.

இதுகுறித்து திரு.வி.க நகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக தலைமறைவான ஷட்டர் கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையின் ஒரு பகுதியினர் ஆந்திரா விரைந்துள்ளனர்.

கொள்ளையர்கள் தப்பிய வாகனத்தின் பதிவெண் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்தது. அதை அடிப்படையாக வைத்து போலீஸார் விசாரித்தனர். இதில், கொள்ளையர்கள் போலி வாகன எண்ணை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால், துப்பு துலக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது.

மேலும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையர்கள் அகரம் பகுதியில் இருந்து கோயம்பேடு - மதுரவாயல் வழியாக சென்றது தெரியவந்தது. அதன் பிறகு எந்த வழியாக கொள்ளையர்கள் சென்றார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை.

வானகரத்தில் இருந்து குயின்ஸ்லேண்ட் வரையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறன்றன. இதனால், சாலையின் இருபுறமும் இருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால், கொள்ளையர்கள் சென்ற காரை பின்தொடர முடியவில்லை. மேலும், பூந்தமல்லி பகுதியில் உள்ள கேமராக்களிலும் கொள்ளையர்கள் சென்ற கார் தெளிவாக தெரியவில்லை.

இந்நிலையில்தான் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 வங்கி ஏடிஎம்கள் காஸ்வெல்டிங்கால் துண்டித்து கொள்ளையடிக்கப்பட்டது. இதனால், இந்த கொள்ளையர்களுக்கும் திருவண்ணாமலை வங்கி ஏடிஎம் கொள்ளையர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், இதுவரை இந்தியா முழுவதும் நடைபெற்ற ஷட்டர் கொள்ளை வழக்கு, அதில் தொடர்புடையவர்களின் விவரங்களையும் சென்னை போலீஸார் பிற மாநில போலீஸாரிடம் கேட்டுள்ளனர். அதன் அடிப்படையிலும் துப்புதுலக்கப்பட உள்ளது. இந்நிலையில் இவ்விரு சம்பவங்களையும் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் போலீஸார் நேற்று தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “கொள்ளையர்களை விைரவில் கைது செய்வோம்” என்றனர். இதற்கிடையில் இணை ஆணையர் ரம்யா பாரதி தலைமையிலான தனிப்படை போலீஸார் ஆந்திராவில் முகாமிட்டுள்ளனர்.

நகைக்கடை கொள்ளையர்களுக்கும் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE