சென்னை பெரம்பூரில் நகைக்கடை ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் வைரம் கொள்ளை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெரம்பூரில் நகைக்கடை ஷட்டரை துளையிட்டு, உள்ளே நுழைந்து 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் வைர நகைகளை கொள்ளையடித்தவர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர்ஜெயசந்திரன்(60). 2 மாடிகள் கொண்ட வீட்டில் 2-வது தளத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். முதல் தளத்தில் ‘ஜே.எல்.கோல்டு பேலஸ்’என்ற பெயரில் கடந்த 12 வருடங்களாக நகைக்கடை நடத்தி வருகிறார். தரை தளத்தில் வாகனங்களை நிறுத்த இடம் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு 9.30மணிக்கு வழக்கம்போல் கடையின் ஷட்டர் கதவை உள்பக்கமாக ஜெயச்சந்திரன் பூட்டினார். கடைக்குள் இருந்தே அவருடைய வீட்டுக்குள் செல்லும் வசதி உள்ளது. அதன்வழியாக அவர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 9 மணிக்கு ஜெயச்சந்திரன் வழக்கம்போல் அதே வழியாக கடையைத் திறக்க வந்தார்.

அப்போது கடையில் இருந்த நகைப் பெட்டிகள் எல்லாம் சிதறிக் கிடந்தன. கடைக்குள் இருந்த பாதுகாப்பு பெட்டகமும் வெல்டிங் இயந்திரத்தால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த சுமார் 9 கிலோ தங்க நகைகளும், ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. கடையின் முன்பக்க ஷட்டர் கதவில் 2 பேர் நுழையும் வகையில் சதுர வடிவில் பெரிய துளை போடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து திரு.வி.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வடசென்னை கூடுதல் காவல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ரம்யா பாரதி, துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும், கரிகாலன் என்றமோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது 100 மீட்டர் தூரம் வரை ஓடி, திரு.வி.க நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று நின்றது.

பெரம்பூரின் முக்கியமான சாலையில் உள்ள நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘கொள்ளையர்கள் நீண்டநாள் நோட்டமிட்டு, கைவரிசையைக் காட்டியுள்ளனர். ஷட்டரை உடைக்க கையடக்க காஸ் வெல்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி சுமார் 3 அடி உயரம், 2 அடி அகலத்துக்கு வெட்டி எடுத்து அது வழியே நுழைந்துள்ளனர். எனவே, ஒருவர் மட்டுமேகொள்ளையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இல்லை. நகைக்கடைமற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராபதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றனர்.

கொள்ளை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட கூடுதல் காவல் ஆணையர் அன்பு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேருக்கு மேல் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கொள்ளையர்களின் கைரேகை கிடைத்துள்ளது. கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய கருவியையும் (ஹார்ட் டிஸ்க்) எடுத்து சென்றுள்ளனர்.

இதனால் கடைக்கு வெளியே சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். கொள்ளையர்கள் பற்றி ஓரளவுக்கு துப்புகிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார். கொள்ளை போன தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE