சென்னை | விவேகானந்தர் இல்லம் அருகே ‘பல்டி’ அடித்து சாலையை கடந்த இளைஞர்: வீடியோ வைரலானதால் மன்னிப்பு கேட்டார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், இளைஞர் ஒருவர் `பல்டி' அடித்து சாலையைக் கடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள சிக்னலில் பாதசாரிகள் நடந்து செல்லும் பகுதியில் ஓர் இளைஞர் பல்டி அடித்து அடாவடி செய்யும் வீடியோ காட்சி, இளமை இதோ... இதோ.. என்ற திரைப்பட பாடலுடன் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலானது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில், வாகனங்கள் சிக்னலுக்காக காத்து நிற்கும் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்த காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறியும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும், வாகனங்களுக்கு இடையூறாகவும், சாலையின் நடுவே வீடியோ எடுக்கும் வரை அங்கிருந்த போலீஸார் என்ன செய்தார்கள் என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பியதுடன், அதுகுறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டனர்.

இதையடுத்து அண்ணா சதுக்கம் போலீஸார், அந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சாலையில் பல்டி அடித்துசாகசத்தில் ஈடுபட்டது, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் என்பதும், அவர் கடந்த 5-ம் தேதி அந்த வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விக்னேஷைப் பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். பின்னர் அவர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டார்.

அதில், இதுபோன்ற வீடியோக்களை எடுக்க மாட்டேன், யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல, அந்த வீடியோ எடுக்க உதவிய விக்னேஷின் நண்பர்களும் மன்னிப்புக் கேட்டனர். பல்டி வீடியோவைத் தொடர்ந்து, விக்னேஷ் மன்னிப்புக் கேட்கும் வீடியோவும் வைரலாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE