மதுரை | தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.5.30 லட்சம் திருட்டு

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.5.30 லட்சத்தை அபகரித்துச் சென்ற டெல்லி இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள பச்சை நாச்சியம்மன் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவ்குமார். இவர் நேதாஜி சாலையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்துகிறார். இவரிடம் டெல்லியைச் சேர்ந்த ஜிதேந்தர் (36) கடந்த 5 மாதங்களாக ஓட்டுநர் மற்றும் உதவியாளராகப் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் மாலை சஞ்சீவ் குமார் கடையில் இருந்தார்.

அப்போது, ஜிதேந்தர் டீ வாங்கி வந்தார். அந்த டீயை குடித்த சஞ்சீவ்குமார் திடீரென மயங்கி விழுந்தார். சிறிதுநேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, ஏற்கெனவே வங்கியில் இருந்து எடுத்துவந்து கடையில் வைத்திருந்த ரூ.5.30 லட்சத்தை காணவில்லை. உடனே ஓட்டுநர் ஜிதேந்தருக்கு போன் செய்த போது அவரது போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் எனக் கருதி திடீர் நகர் காவல்நிலையத்தில் சஞ்சீவ்குமார் புகார் அளித்தார். அதன் பேரில், டிராவல்ஸ் நிறுவனத்தில் உள்ள கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, ஜிதேந்தர் கடையில் ஹெல்மெட் எடுப்பதுபோல ரூ.5.30 லட்சத்தை திருடியது தெரியவந்தது. போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE