பெங்களூருவில் இருந்து பைக் திருடி வந்த 5 இளைஞர்கள் ஆம்பூரில் சிக்கினர்: கொள்ளையர்களை பின்தொடர்ந்து வந்த உரிமையாளர்

By செய்திப்பிரிவு

ஆம்பூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து இரு சக்கர வாகனத்தை திருடிக் கொண்டு ஆம்பூர் வந்த கொள்ளையர்களை வாகன உரிமையாளர் ஜிபிஎஸ் உதவியுடன் ஆம்பூர் வரை விரட்டி வந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபெருமாள் (30). இவர், கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம்ஒன்றில் மின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது இரு சக்கர வாகனத்தை எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஜெயபெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் தங்கி உள்ள வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு உறங்க சென்றார்.

இந்நிலையில், நேற்று அதி காலை இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இரு சக்கர வாகனத்தில் பொருத் திருந்த ஜிபிஎஸ் கருவியிலிருந்து ஜெயபெருமாள் செல்போனில் குறுஞ்செய்தி வந்ததை தொடர்ந்து விழித்துக் கொண்ட ஜெயபெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து, இரு சக்கர வாகனம் செல்லும் பாதையை காரில் பின் தொடர்ந்து வந்தனர்.

அப்போது, ஜெய பெருமாளின் இரு சக்கர வாகனம் நீண்ட நேரமாக திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள காட்டு கொள்ளை என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஜிபிஎஸ் மூலம் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆம்பூர் பகுதியை சேர்ந்த நண்பர்களின் உதவியுடன் காட்டுக் கொள்ளை பகுதிக்கு விரைந்த ஜெய பெருமாள் அங்கு இரு சக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த கொள்ளையர்களை கையும், களவுமாக பிடித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில், ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரு சக்கர வாகனத்தை பெங் களூருவில் இருந்து திருடி வந்த ஆம்பூர் வட்டம் பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(22), அஜய்(20), சக்திவேல்(21), விஷ்வா(22), கணேஷ் (22)ஆகிய ஐந்து பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், சதீஷ் என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வங்கி திருட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் வாகன திருட்டில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கணேஷ் என்பவர் பெண் காவலர் ஒருவரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பெங்களூருவில் திருடப்பட்ட இரு சக்கர வாகனத்தை வாகன உரிமையாளரே ஜிபிஎஸ் வசதியுடன் பின் தொடர்ந்து வந்து கண்டறிந்து கொள்ளையர்களை காவல்துறையினிடம் பிடித்துக் கொடுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE