காஞ்சிபுரம் | சிறுமிக்கு வன்கொடுமை செய்தவருக்கு 15 ஆண்டு சிறை: மற்றொரு புகாரில் தனியார் பள்ளி ஊழியர் கைது

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்/திருவேற்காடு: காஞ்சிபுரம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேபோல் திருவேற்காடு அருகே தனியார் பள்ளி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேரணக்காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் (42). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அக். 22-ம் தேதி 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரித்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பி. தமிழரசி தீர்ப்பளித்தார். அதில் சிங்காரவேலன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மற்றொரு கைது

இதேபோல் திருவேற்காடு அருகே தனியார் பள்ளி ஊழியர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே மேல்அயனம்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், கீழ்அயனம்பாக்கம், அண்ணாநகரைச் சேர்ந்த சசிகுமார் என்கிற எட்வின், ஆபீஸ் பாயாக பணிபுரிந்து வருகிறார்.

இவரது செல்போனில் மாணவியின் ஆபாச படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, எஸ்.ஆர்.எம்.சி. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி முதல்வர் புகார் அளித்தார். இதன்பேரில் நடந்த விசாரணையின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று சசிகுமாரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE