வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பொறியியல் பட்டதாரியிடம் ரூ.7.26 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

விருதுநகர்: காரியாபட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.26 லட்சம் மோசடி செய்ததாக இளம்பெண் உள்ளிட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த அர்ச்சுனன் மகன் தீபக்குமார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் கர்ணன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிணி (27) என்பவர் அறிமுகமாகி உள்ளார். பின்னர், அவர் மூலம் புதுக்கோட்டை சண்முகா நகரைச் சேர்ந்த கார்த்திக் (32) என்பவரும் அறிமுகமாகி உள்ளார்.

இவர்கள் இருவரும் ஸ்பெயினில் வேலை வாங்கித் தருவதாக தீபக்குமாரிடம் கூறியுள்ளனர். அதற்கு ரூ.7.30 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதை நம்பி கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.7.25 லட்சத்தை தீபக்குமார் தனது வங்கிக் கணக்கு மற்றும் தனது சித்தப்பா வேணுஸ்ரீனிவாசன் வங்கிக் கணக்கு மூலம் செலுத்தியுள்ளார்.

ஆனால், இதுவரை வேலை வாங்கிக் கொடுக்காததால் தீபக்குமார் சந்தேகம் அடைந்துள்ளார். ஹரிணியும், கார்த்திக்கும் ஏமாற்றியது தெரியவந்தது. இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தீபக்குமார் புகார் அளித்தார். அதையடுத்து, ஹரிணி, கார்த்திக் ஆகியோர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE