அரவக்குறிச்சி | கள்ளநோட்டு கும்பலிடம் பணம் பறிக்க முயன்ற 6 பேர் சிக்கினர்

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: அரவக்குறிச்சி அருகே கள்ளநோட்டு மாற்றும் கும்பலிடம் பணம் பறிக்க முயன்ற 1 பெண் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் அரவக்குறிச்சி போலீஸாரிடம் சிக்கினர். அதில் ஒருவரிடம் போலி போலீஸ் அடையாள அட்டை மற்றும் பத்திரிகையாளர் அடையாள அட்டை ஆகியவை இருந்தன.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு கரூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேற்றிரவு மதுரையில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் கார் ஒன்று கரூர் நோக்கி வந்துக் கொண்டு இருப்பதாகவும், அக்காரை நிறுத்தி சோதனை செய்யுமாறு தெரிவித்தனர். இதையடுத்து ஆண்டிப்பட்டிக்கோட்டை சோதனை சாவடியில் பணியிலிருந்த முதல்நிலை காவலர் ஜாபர்சாதிக், ஊர்க்காவல் படை வீரர் ராஜேஷ் ஆகியோர் காரை நிறுத்த முயன்ற போது கார் நிற்காமல் சென்றது.

தொடர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் தடா கோவில் பிரிவு அருகே அக்காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வெப்படையைச் சேர்ந்த பூபதி (43), ஈரோடு பட்டேல் தெருவைச் சேர்ந்த ஓட்டுநர் ஞானசேகரன் (32), நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையம் சமய சங்கிலி அக்ரஹாரத்தைச் சேர்ந்த சீனிவாசன் (22), திருச்செங்கோடு ஒட்டமந்தையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் என்கிற ஐயப்பன் (35), வேலாத்தாள் கோவிலை சேர்ந்த காய்கறி வியாபாரி செந்தில்குமார் (48), முத்துமாரி (38) என்ற ஒரு பெண் உள்ளிட்ட 6 பேர் இருந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளநோட்டு கும்பலிடம் போலீஸ் எனக்கூறி ஏமாற்றி பணத்தை பிடுங்க முற்படும்போது சங்கரன்கோவில் போலீஸார் ஒரு கும்பலை பிடித்ததும், அங்கிருந்து இந்த 6 பேரும் தப்பித்து வந்ததும் தெரியவந்தது. வரும் வழியில் அரவக்குறிச்சி போலீஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் சங்கரன்கோவில் போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில் சங்கரன்கோவில் போலீஸார் இன்று (ஜன.7) காலை அரவக்குறிச்சி வந்து 6 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE