வேலூரில் வழிப்பறி வழக்கில் மூன்று பேர் கைது

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூரில் கோழிப்பண்ணை உரிமையாளரிடம் பணம் பறித்ததாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். பண்ணைக்கு தேவையான தீவனம் வாங்குவதற்காக சுரேஷ் ரூ.20 ஆயிரம் பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் கொணவட்டம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சுரேஷை வழிமறித்த ஒரு கும்பல் அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டனர். மேலும், அவரது குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் ரூ.2 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு அவரை மீட்டுச் செல்லும்படி மிரட்டியுள்ளனர்.

இந்த தகவலால் அதிர்ச்சி யடைந்த சுரேஷ் குடும்பத்தினர் சிலர் கொணவட்டம் பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த கும்பலை பிடிக்க முயன்ற போது 3 பேர் மட்டும் சிக்கினர். 2 பேர் தப்பி ஓடினர். பிடிபட்டவர்களை வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த பாஷா (37), ரியாஸ் (32), சித்திக் (33) என்று தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, வழிப்பறி வழக்கில் பாஷா உள்ளிட்ட 3 பேரை கைது செய்ததுடன் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE