திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன சோதனைச் சாவடி திறப்பு

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் ஒய் சாலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் நேற்று திறந்து வைத்தார்.

இந்த சோதனைச்சாவடியில் வாகனங்களின் எண்களை தானாகவே கண்டறியும் வசதிகொண்ட 2 கேமராக்கள், பொது அறிவிப்புக்கான ஒலிப் பெருக்கிகள், இரும்பு தடுப்பாண்களுடன் கூடிய நவீன வசதிகள் உள்ளன. திறப்பு விழாவில், பிரண்ட்லைன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாநகர காவல் துணை ஆணையர்கள் சுரேஷ்குமார் (தலைமையிடம்), அன்பு (வடக்கு), உதவி ஆணையர் நிவேதாலட்சுமி, ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இது குறித்து மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் தெரிவித்துள்ளது: இந்த அதிநவீன காவல் சோதனைச்சாவடி எண்-5 இங்கு அமைக்கப்பட்டுள்ளதால் திருச்சி மாநகருக்குள் வரும் வாகனங்களையும், வெளியேறும் வாகனங்களையும் போலீஸார் எளிதில் வாகனத் தணிக்கை மேற்கொள்ள முடியும்.

குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், சட்டவிரோத நபர்களை கண்காணிக்கவும், ரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக்காவல், அழகிரிபுரம், திம்மராயசமுத்திரம், கொண்டயம்பேட்டை, கல்லணை சாலை, திருவளர்ச்சோலை ஆகிய பகுதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்கவும் ஏதுவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE