திருடன் என நினைத்து கட்டிடத் தொழிலாளி கொலை: மங்கலத்தில் 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருப்பூர்: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வம் (35). திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த கோம்பக்காட்டுப்புதூர் பகுதியில் நண்பர்களின் அறையில் முத்துச்செல்வம் தங்கியிருந்து, கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த 1-ம் தேதி அதிகாலை அறையில் இருந்து வெளியே சென்ற முத்துச்செல்வம், நீண்டநேரமாகியும் திரும்பவில்லை. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துச்செல்வத்தின் மனைவி விஜயசாந்தியை செல்போனில் தொடர்பு கொண்ட நபர்கள், சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த உன் கணவரை பிடித்து விசாரித்து வருவதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துள்ளனர்.

இது தொடர்பாக கணவரின் அறையில் இருந்தவர்களுக்கு விஜயசாந்தி தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மங்கலம் போலீஸார் உதவியுடன், முத்துச்செல்வத்தை அவரது நண்பர்கள் தேடினர். அங்குள்ள தனியார் விசைத்தறிக் கூடம் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துச் செல்வத்தை போலீஸாரும், அவரது நண்பர்களும் மீட்டனர்.

சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரை கொண்டு சென்றனர். ஏற்கெனவே முத்துச்செல்வம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சடலத்தை, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

முத்துச்செல்வம் அதிகாலை நேரத்தில் விசைத்தறிக் கூடம் அருகே நடந்து சென்றதாகவும், திருடன் என சந்தேகித்து கோம்பக்காட்டுப் புதூரை சேர்ந்த விசைத்தறிக் கூட உரிமையாளர் துரை பழனிசாமி (45), சவுந்தரராஜன் (48) ஆகியோர் கட்டையால் அடித்ததில் முத்துச்செல்வம் உயிரிழந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE