இங்கிலாந்து நபருக்கு 2 ஆண்டு சிறை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற வழக்கில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனதன் தோர்ன் (47) என்பவரை, கியூ பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு ஜூன் 10-ம் தேதி பிடித்து விசாரணை நடத்தினர்.

தப்பிச் செல்ல முயற்சி: அவர், மும்பையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளியேவந்துள்ளார். சுமார் 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ள அவர், கரோனா ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் தப்பிச் செல்ல முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது.

கியூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜோனதன் தோர்னை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜயஅனிதா, நீதித்துறை நடுவர் வி.சி.குபேரசுந்தர் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

25 சாட்சிகளிடம் விசாரணை: அந்த குற்றப்பத்திரிகை நகல் ஜோனதன் தோர்னுக்கு வழங்கப்பட்டது. அப்போது, அவர் ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிகை நகல் வேண்டும் என்று கேட்டதால், ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் 11-ம்தேதி ஜோனதன் தோர்னிடம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. மொத்தம் 25 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 28-ம் தேதியுடன் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.

இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஜோனதன் தோர்னுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதித் துறைநடுவர் வி.சி.குபேரசுந்தர் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் போலீஸ்தரப்பில் அரசு வழக்கறிஞர் முருகபெருமாள் ஆஜரானார்.

தீர்ப்பையடுத்து ஜோனதன் தோர்ன் மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE