நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் கைது - சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் ஆற்காட்டை அடுத்த கத்தியவாடி கிராம நிர்வாக அலுவலரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்,அனுமதி பெற்ற அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக மாற்றப்படுகிறது. பின்னர் அவை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டுகளில் நேரடி நெல் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணைசெயலாளர்கள் மட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றிருப்பது உண்மை என தெரியவந்தது. எனவே, இந்தமுறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, வேலூர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் மகாலட்சுமி முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.8 கோடிக்குமோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வருவாய்த் துறை அதிகாரிகள், இடைத்தரகர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் என60-க்கும் மேற்பட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை 32 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள கத்தியவாடி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் என்பவர் மோசடியாக அடங்கல் வழங்கியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பாலசுப்பிரமணியனை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் மகாலட்சுமி நேற்று முன்தினம் இரவு கைது செய்தார். இதையடுத்து, இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE