ஒகேனக்கல் அருகே ரூ.80 லட்சம் கேட்டு 4 பேரை கடத்திய 6 பேர் கும்பல் கைது

By செய்திப்பிரிவு

தருமபுரி: ஒகேனக்கல் அருகே பணம் கேட்டு இளைஞர்களை கடத்திய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தப்பாடி அடுத்த மடம் பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் விஸ்வநாதன் (37). இவர், மும்பையில் சிப்ஸ் கடை நடத்தி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய விஸ்வநாதன், மீண்டும் மும்பைக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி காலை நண்பர்களுடன் பென்னாகரம் சென்ற விஸ்வ நாதனும், அவரது நண்பர்களும் வீடு திரும்பவில்லை. அவர்களது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையில், விஸ்வநாதனின் சகோதரரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் விஸ்வநாதனையும், அவரது நண்பர்களையும் கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்களை விடுவிக்க ரூ.80 லட்சம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக, விஸ்வநாதன் மனைவி மஞ்சுளா ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் தனிப்படை அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பணம் கேட்டு மிரட்டியவரின் செல்போன் சிக்னல் குறித்து ஆய்வு செய்தனர். அதில், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த புக்கம்பட்டி பகுதியில் இருந்து போன் அழைப்பு வந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் தமிழரசன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

தீவிர விசாரணையில், தமிழரசன் (23), காடையாம்பட்டி முருகன் (48), காந்தி (43), காமலாபுரம் ரத்தினம் (45), ஓமலூர் கணபதி நகர் கார்த்திகேயன் (24), அவருடைய சகோதரர் பாஸ்கர் (22) ஆகியோர் விஸ்வநாதன் மற்றும் அவரது 3 நண்பர்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து விஸ்வநாதன் உள்ளிட்ட 4 பேரை மீட்ட போலீஸார் தமிழரசன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இந்த கடத்தல் விவகாரத்தின் பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE