பட்டாபிராமில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி 7 ஆண்டாக தலைமறைவான தம்பதி கைது

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: பட்டாபிராமில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்து விட்டு கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், எம்ஜி சாலை, 3-வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் எஸ்.முருகையன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 2015-ம் ஆண்டு புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: பட்டாபிராம், அண்ணா தெருவில் வசித்து வரும் ரூபி என்கிற முருகன் மற்றும் அவர் மனைவி நிர்மலா ஆகிய இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். மேலும், முருகன் வடக்கு பஜாரில் சலூன் கடையையும் நடத்தி வந்தார்.

முருகன் நடத்திய சீட்டில் தலா ரூ.5 லட்சம் வீதம் எனது பெயரிலும், எனது மகன் பெயரிலும் மொத்தம் ரூ.10 லட்சம் பணம் கட்டி சேர்ந்தேன். கடந்த 2015-ம் ஆண்டு டிச.10-ம் தேதியுடன் சீட்டு முடிந்தது. ஆனால், எனக்கு சீட்டுப் பணத்தை முருகன் தரவில்லை. என்னைப் போல் இந்தச் சீட்டில் சேர்ந்த 20 பேருக்கும் பணம் தராமல் ஏமாற்றினார். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

கடந்த 7 ஆண்டுகளாக முருகனும், மனைவி நிர்மலாவும் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராயிடம் முருகையன் மனு அளித்தார். ஆணையரின் உத்தரவின் பேரில், சீட்டு மற்றும் கந்து வட்டி தடுப்புப் பிரிவு ஆய்வாளர் பாலன் தலைமையில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், பெங்களூரில் உள்ளஜீவன் பீமா நகரில் இருவரும்பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தனிப்படைபோலீஸார் அங்கு சென்று முருகனையும், அவரது மனைவி நிர்மலாவையும் கைது செய்தனர். திறமையாக விசாரித்து இருவரையும் கைது செய்ததற்காக தனிப்படை போலீஸாரை ஆவடி காவல் ஆணையர் பாராட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE