டெல்லியில் கொடூரம்: 5-ம் வகுப்பு மாணவியை ஜன்னல் வழியாக வீசியெறிந்த ஆசிரியர் கைது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 5-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையின் ஜன்னல் வழியாக வீசியெறிந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 11.15 மணியளவில் நடந்துள்ளது.

இது குறித்து டெல்லி மத்திய பகுதி துணை ஆணையர் ஸ்வேதா சவுகான் அளித்த பேட்டியில், "டெல்லியில் உள்ள நிகார் நிகாம் பாலிகா வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு 5-ம் வகுப்பு படித்து வந்தார் மாணவி வந்தனா. இன்று காலை கீதா தேஷ்வால் என்ற ஆசிரியரால் அவர் தாக்கப்பட்டுள்ளார். அப்போது சக ஆசிரியரான ரியா அந்தச் சிறுமியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், ஆசிரியர் கீதாவோ சிறுமி வந்தனாவை கத்தரிக்கோலால் தாக்கியதோடு, அவரை ஜன்னல் வழியாக வெளியே வீசி எறிந்துள்ளார். அவர் வீசி எறிவதை வெளியில் இருந்த சிலர் நேரடியாக பார்த்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “எங்களுக்கு தகவல் கிடைத்ததும் காவல் நிலைய தலைவர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆசிரியர் கீதா கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நடைபெற்றதன் சூழ்நிலை ஏதும் இதுவரை உறுதியாகவில்லை. சிறுமி கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது. ஆசிரியர் கீதாவிடம் விசாரித்து வருகிறோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE