பெரம்பலூர் | விளையாட்டு விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பயிற்றுநர் மீது போக்சோ வழக்கு: விளையாட்டு அதிகாரி சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் சிலரிடம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக விளையாட்டு பயிற்றுநர் மற்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி, டேக்வாண்டோ பயிற்சி பெற்று வரும்மாணவிகள் சிலரிடம், டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் கடந்த சில மாதங்களாக ஆபாசமாக பேசுவது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவிகள், மாவட்ட விளையாட்டு அதிகாரி சுரேஷிடம் புகார் கொடுத்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த மாணவிகள் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு கடந்த நவம்பர் மாதம் புகார் மனு அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் கோபிநாத் மற்றும் குழந்தைகள் நலக்குழுவினர் டிச.2-ம் தேதி விளையாட்டு விடுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, டிச.7-ம்தேதி கோபிநாத் அளித்த புகாரின்பேரில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தர்மராஜன், மாணவிகள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சுரேஷ் ஆகியோர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், போக்சோ வழக்குப் பதிவு செய்து ஒரு வாரம் ஆகியும், தொடர்புடையவர்களை போலீஸார் கைது செய்யாததைக் கண்டித்தும், உடனே கைது செய்யக் கோரியும் இந்திய மாதர் தேசியசம்மேளனத்தின் மாவட்டச் செயலாளர் கல்யாணி தலைமையில் பெண்கள் நேற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி-யை சந்தித்து மனு அளித்தனர்.

நடவடிக்கை எடுக்கவில்லை: இதனிடையே, மாணவிகள் தந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அதிகாரி சுரேஷை, பணியிடை நீக்கம் செய்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE