மதுரை | வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய எஸ்ஐக்கு 4 ஆண்டு சிறை

By கி.மகாராஜன்

மதுரை: வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய சார்பு ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் குருவித்துறையைச் சேர்ந்தவர் செல்வேந்திரன். நிலப் பிரச்சினையில் செல்வேந்திரன் மற்றும் குடும்பத்தினர் மீது காடுபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கிலிருந்து செல்வேந்திரனை விடுவிக்க எஸ்ஐ கலிஸ்டஸ் ராஜ்குமார் முதலில் ரூ.30 ஆயிரம், பின்னர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸில் செல்வேந்திரன் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுத்துள்ளார் செல்வேந்திரன். அவரிடம் லஞ்ச பணத்தை வாங்கிய போது எஸ்ஐ கலிஸ்டஸ் ராஜ்குமாரை அங்கு மறைந்திருந்த போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பசும்பொன் சண்முகையா விசாரித்து, எஸ்ஐ கலிஸ்டஸ் ராஜ்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE