டெல்லியில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் போன் அழைப்பு மூலம் ரூ.50 லட்சம் திருட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தெற்கு டெல்லியில் பாதுகாப்பு சேவை மையத்தின் இயக்குநர் ஒருவரின் செல்போனுக்கு அண்மையில் தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன. அவர் அழைப்பை எடுத்ததும், மறுமுனையில் எந்த பதிலும் வரவில்லை. தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன.

அதன்பின், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.12 லட்சம், ரூ.4.6லட்சம், 2 முறை ரூ.10 லட்சம், ரூ.13.4லட்சம் என 4 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. பணப் பரிமாற்றத்துக்கான ஓடிபி எண்ணும் அவருக்கு வரவில்லை. உடனடியாக அவர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க, வங்கிக் கணக்குக்கு பணம் சென்றவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது மோசடியாளர்கள், கமிஷன் அளிப்பதாகக் கூறி தங்களது வங்கிக் கணக்கைக் கேட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

வங்கிகளில் பொதுவாக பணப்பரிமாற்றங்கள் செய்யும் போது பல்வேறு நிபந்தனைகள் இருக்கும். ஆனால், ரூ.50 லட்சத்தை இழந்த இயக்குநரின் வங்கிக் கணக்கு, நடப்புக் கணக்கு (கரன்ட் அக்கவுன்ட்) என்பதால் அந்த கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், எந்த தடையும் இல்லாமல் மோசடி நடந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில், சிம்ஸ்வாப் முறையில், சைபர் குற்றவாளிகள் பணத்தை திருடி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

சில தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பயன்படுத்தி மோசடியாளர்கள், ஒரு நபருக்கு போனில் அழைப்பு விடுத்து, அந்த சிம் கார்டை ஆக்டிவேட் செய்து அதன் மூலம் வங்கியிலிருந்து பணத்தை மோசடி செய்யும் புதிய உத்தியை கையாண்டுள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த வகையில் திருடுபவர்கள், செல்போன் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு போன் செய்து சிம் கார்டை ஆக்டிவேட் செய்கின்றனர். அது ஆக்டிவேட் ஆனதும், அந்த போனுக்குரிய முழு கட்டுப்பாடுகளையும் அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்” என்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த ஜவுளி அதிபரிடம் ரூ.1.8 கோடி இதேமுறையில் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE