சிசிடிவி கேமராக்கள் முதல் ஆன்லைன் பண மோசடி வரை: நிலவரம் பகிர்ந்த டிஜிபி சைலேந்திரபாபு

By டி.ஜி.ரகுபதி

கோவை: தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், இணையவழிக் குற்றங்களைத் தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தை டிஜிபி சைலேந்திரபாபு சனிக்கிழமை (டிச.10) திறந்து வைத்தார். சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை டிஜிபி வழங்கினார். பின்னர், காவல் துறை உயரதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் 3 புதிய காவல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும்.

தமிழகத்தை பொறுத்தவரை குற்றங்கள் குறைந்துள்ளன. கொலை குற்றங்கள் குறைந்தால், அந்த ஊரில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் எனக் கூறலாம். கடந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 1,597 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதேகாலகட்டத்தில் நடப்பாண்டு 1,368 கொலை வழக்குகளே பதிவாகியுள்ளன. கிட்டத்தட்ட 15 சதவீதம் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன. இது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கான அறிகுறி.

சிசிடிவி கேமராக்கள்: ஆதாயக் கொலைகள் முன்பு 89 ஆகவும், தற்போது 79 ஆக குறைந்துள்ளது. கொள்ளை வழக்குகள் 116-ல் இருந்து 96 ஆக குறைந்துள்ளது. முக்கியமான குற்றங்கள் குறைந்துள்ளன. தமிழகத்தில் சென்னை உட்பட அனைத்து மாநகரங்கள், மாவட்டங்களில் அதிகப்படியான சிசிடிவி கேமரா அரசு செலவிலேயே நாம் பொருத்தி வருகிறோம்.

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் மூலம் வேலூர், தஞ்சாவூர், திருச்சி , சென்னை போன்ற இடங்களில் அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளோம். ஒட்டுமொத்தமாக சிசிடிவி கேமராக்கள் குற்றங்களை கண்டுபிடிக்க பயனுள்ளதாக உள்ளன. தற்போது காவலர்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள் கொடுத்துள்ளோம். தமிழகம் முழுவதும் பழைய குற்றவாளிகள் சுமார் 75 ஆயிரம் பேரிடம் புகைப்படம், வீடியோ நாம் வைத்துள்ளோம். சந்தேகத்துக்குரிய நபரின் புகைப்படத்தை வைத்தே அவர் குற்றப் பின்னணி உள்ளவரா என கண்டறிய முடியும். முகத்தை வைத்தும், வாகனங்களின் எண்ணை வைத்து கண்டுபிடிக்கக்கூடிய மென்பொருள்கள் நம்மிடம் உள்ளன.

மாநில எல்லைகளில் சோதனை மாநில எல்லையை பொருத்தவரை, கஞ்சா தடுப்புக்காக 6 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து வரக்கூடிய பயோ மெடிக்கல் வேஸ்ட்டை தடுக்க பொள்ளாச்சி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற 6 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

முதல்வர் அறிவித்தபடி, முக்கியமான சுங்கச்சாவடிகளில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் போது, வாகனக் கண்காணிப்பு தீவிரமாகும்.

இணையவழிக் குற்றங்கள் தான் தற்போதைய டிரெண்டிங். இதுதொடர்பாக 45 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. படித்தவர்கள் கூட இதில் ஏமாறுகின்றனர். பல்வேறு காரணங்களை கூறி, தகவல்களை பெற்று பணத்தை திருடிச் செல்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் சிறிய தொகையை நீங்கள் வெல்வது போல் காட்டிவிட்டு, பெரிய தொகையை கட்டியவுடன் மோசடி செய்து விடுவர். ஆன்லைன் குற்றங்களை தடுக்க தொடர்ந்து காவல் துறையின் சார்பில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறோம். பணத்தை திருடக்கூடிய நோக்கமுள்ள நபர்கள் மட்டும் தான், உங்களிடம் வங்கியின் விவரங்களை கேட்பர். அதை தரக்கூடாது” என்று அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE