கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 ஐம்பொன் சிலைகளுடன் ஒருவர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 ஐம்பொன் சிலைகளை வைத்திருந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 பேர் ஐம்பொன் சிலைகளை விற்பனை செய்வது தொடர்பாக பேசிக்கொண்டிருந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விரைந்து வந்த கோயம்பேடு போலீஸார், சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரிக்க முயன்றனர். அப்போது இருவரும் தப்பி ஓடினர். அதில் ஒருவரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபர் வைத்திருந்த பையில் 1.5 கிலோ எடை கொண்ட ஐம்பொன் பொன்மணி விளக்கு ஏந்திய சிலையும், 300 கிராம் எடை கொண்ட சிறிய பெருமாள் சிலையும் இருந்தது.

பிடிபட்டவர் கும்பகோணத்தை சேர்ந்த சுதாகர் (32) என்பது விசாரணையில் தெரியவந்தது. ‘‘திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர், இந்த சிலைகளை எங்களிடம் கொடுத்தார். இந்த சிலைகளை சென்னையில் உள்ள ஒருவரிடம் கொண்டு சென்று தரவேண்டும். அவரிடம் நான் தரும் பழைய 2 ரூபாய் நோட்டுகளை காட்டினால், அவர் ரூ.3 லட்சம் பணம் கொடுப்பார்.

அதை வாங்கி வந்து தந்தால் உங்களுக்கு பணம் தருகிறேன்’’ என அந்தப் பெண் கூறியதாக சுதாகர் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். இதையடுத்து, சிலைகளை கொடுத்தனுப்பிய பெண் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய தினேஷ்(27) என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE