சுங்கத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது: என்ஐஏ விசாரணை வளையத்தில் இருந்தவர்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: சுங்கத் துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கில் ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேரை வடக்கு கடற்கரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை மண்ணடி, மரைக்காயர் தெருவில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிடச் சென்றனர். அப்போது அங்கிருந்த 3 பேர், சுங்கத் துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரிகள் வடக்கு கடற்கரை போலீஸில் புகார் அளித்தனர். இதை அறிந்ததும் தகராறு செய்த மண்ணடியைச் சேர்ந்த சிக்கந்தர்(40), ராஜாமுகமது (41), முகமது ஹசன் (36)ஆகிய 3 பேரும் தலைமறைவாகினர். அவர்களை் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேரையும் தனிப்படை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இந்திய பணம் ரூ.50 லட்சம், ரூ.16 லட்சம் மதிப்புள்ளவெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கைதான 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைதாகியுள்ள சிக்கந்தர், ராஜா முகமது இருவரும் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் சில ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானில் இருந்து வந்த என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் இருந்தவர்கள். இதனால், கைதான இவர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா? எனத் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE