கோவையில் சிசிடிவி கேமராக்களை அதிகமாக பொருத்த நடவடிக்கை

By செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் திருடுபோன, தொலைந்துபோன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமை வகித்து, ரூ.23 லட்சம் மதிப்பிலான 155 செல்போன்களை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடப்பாண்டு ஜனவரி முதல் தற்போது வரை ரூ.90 லட்சம் மதிப்புள்ள 604 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சைபர் கிரைம் பிரிவில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த செல்போன்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 371 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.73.54 லட்சம் மதிப்புள்ள 551 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் 115 கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லூரிகளையும் அணுகி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 65 கல்லூரிகளில் போதைப்பொருளுக்கு எதிரான கிளப் தொடங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் கஞ்சா ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பழைய கஞ்சா வியாபாரிகளை அழைத்து மறுவாழ்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுமுகை மற்றும் கிணத்துக்கடவு போலீஸ் லிமிட்களில் தலா ஒரு கிராமங்கள் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமங்கள் எனக்கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கஞ்சா புழக்கம் மீண்டும் வராதவாறு கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

228 கிராம ஊராட்சிகளிலும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடப்பாண்டில் 951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1.59 கோடி மதிப்புள்ள 16 டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள காவல்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பில்லூர் அணை திறக்கப்பட்டால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு வர வாய்ப்புள்ளது. இதனால் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்டப் பகுதியில் மொத்தம் 5,400 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அனைத்து வர்த்தக பகுதிகளில் உள்ள கடைகளிலும் அவர்களது ஒப்புதலுடன் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருட்டு சம்பவங்களைத் தடுக்க குடியிருப்பு பகுதிகளில் கேமராக்களை பொருத்த குடியிருப்பு சங்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE