தூத்துக்குடி | சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடம்பூர் அருகேயுள்ள கீழமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி மகன் சுடலைமாடன் (57), கூலித் தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 04.01.2020 அன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சுடலைமாடனை கைது செய்தனர்.

இவ்வழக்கை கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் புலன் விசாரணை செய்து கடந்த 29.02.2020 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சாமிநாதன், குற்றம்சாட்டப்பட்ட சுடலைமாடனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் மாரியம்மாள், நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டஅரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் ஜெபமேரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE