மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையை அடுத்த கேளம் பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்தாண்டு சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பள்ளியில் பயின்ற மாணவரின் தாயார் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தரப்பில் உயர் நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக நடந்தது. அப்போது சிவசங்கர் பாபா தரப்பில் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டுகளின்கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

அப்போது காவல் துறை தரப்பில், சிவசங்கர் பாபாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளன என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆனதாமதத்தை ஏற்றுக்கொள்ளக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால், இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, மனுதாரரான சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பாலியல் தொல்லை என்பது தீவிரமான குற்றச்சாட்டாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்க தயக்கம் காட்டுவதற்கு அச்சம் மட்டுமே காரணம் அல்ல என்றும், சம்பந்தப்பட்டவர்களின் செல்வாக்கும் காரணம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE