புதுச்சேரியில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் நடப்பாண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 79 வழக்குகள் செப்டம்பர் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குழந்தை திருமணம் தொடர்பாக 9 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்றாண்டுகளை விட இம்முறை போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளது.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின்படி பதிவாகும் வழக்குகள் புதுச்சேரியில் கடந்த 2019-ல் 41, 2020ல் 46, 2021ல் 65 பதிவானது. நடப்பாண்டில் செப்டம்பர் வரை, போக்சோ சட்டத்தின் கீழ் 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த வழக்குகளில் 59 வழக்குகள் புதுச்சேரி, மாகே மற்றும் ஏனாம் பகுதிகளை உள்ளடக்கிய காவல் நிலைய எல்லைக்குள் உள்ளன.

59 வழக்குகளில் 33 வழக்குகள் கடத்தல் தொடர்பானவை. இது கடந்த 3 ஆண்டுகளை விட அதிகம். அதேபோல் குழந்தை திருமணங்கள் 2019ல் ஒன்றாக இருந்தது. 2020 மற்றும் 2021ல் பூஜ்யமாக இருந்தது. நடப்பாண்டு செப்டம்பர் வரை 9 குழந்தைகள் திருமணங்கள் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பாக சீனியர் எஸ்பி தீபிகா கூறுகையில், "பெரும்பாலான வழக்குகள் ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து தகவல் பெற்று பதிவு செய்கிறோம்." என்று குறிப்பிட்டார். ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சுஜாதா கூறுகையில், "மருத்துவ உதவியை நாடும் சிறுமியின் ஆதார் விவரங்களை பார்க்கும்போது விவரங்கள் தெரிய வரும்.

நடைமுறையின்படி நாங்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, பின்னர் பெண் குழந்தைகளின் மருத்துவ தேவைகளைக் கவனிக்கிறோம். டீன் ஏஜ் கர்ப்பம் பெரும்பாலும் வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை, நோய்த்தொற்றுகள், பிரசவத்தில் சிரமம் மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் பிரசவம் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது" என்று குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக வரதட்சணை தடுப்பு ஆலோசனைக் குழுவின் தலைவரும், குழந்தைகள் உரிமை ஆர்வலருமான வித்யா ராம்குமார் கூறுகையில், "இளம் வயதிலேயே திருமணம் செய்து வைப்பது, பெண்ணின் குழந்தை பருவத்தை முடிவுக்கு கொண்டு வருகிறது. ஒரு பெண்ணின் குடும்பம் அவளை ஒரு சுமையாக கருதுவதால், பெரும்பாலும் இதுபோன்ற திருமணம் நடக்கிறது.

விழிப்புணர்வு செய்வதன் மூலம் இந்தப் போக்கை மாற்றியமைக்க முடியும். பெண் மற்றும் பையனின் குடும்பத்தினருக்கு தண்டனை வழங்க வேண்டும். மேலும், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் மற்றும் குழந்தை திருமணங்களைக் கண்காணிப்பதற்காக கிராமங்க ளிலும், நகர்ப்புற ஏழைப் பகுதிகளி லும் குழந்தைப் பாதுகாப்பு பிரிவுகளை நிறுவ வேண்டிய அவசியம் உள்ளது" என்று குறிப்பிட்டார்.

சமூக ஆர்வலர்கள் தரப்பில் விசாரித்தபோது, "கரோனா தொற்றுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சூழலே இதற்கு முக்கியக் காரணம். கரோனாவுக்குப் பிறகு பொருளாதார ரீதியான பிரச்சினைகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன" என்றனர், கரோனாவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள சூழலே இதற்கு முக்கியக் காரணம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE