ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்து ரூ.40 லட்சத்துக்கு பத்திரப் பதிவு: தென்மண்டல ஐ.ஜி.யிடம் வழக்கறிஞர் புகார்

By செய்திப்பிரிவு

ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து ரூ.40 லட்சமாக குறைத்து மதிப்பிட்டு பத்திரப் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தென் மண்டல ஐஜி அலுவலகத்தில் திருமங்கலம் வழக்கறிஞர் புகார் செய்துள்ளார்.

திருமங்கலம் வழக்கறிஞர் வினோத் குமார். இவர், தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் அளித்துள்ள புகார் ஒன்றில் கூறியிருப்பதாவது:

திருமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் துரைபாண்டி, ஜெயராஜ். இவர்கள் திருமங்கலம் சார்-பதிவாளர் அலுவலகம் மூலம் சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை ரூ.40 லட்சம் என குறைத்து மதிப்பிட்டு பத்திரப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. பத்திரப் பதிவு மற்றும் வருமான வரித் துறைக்கு இழப்பு ஏற்படுத்தும் விதமாக இச்செயல் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியதால், என் மீது ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துகளை மோசடியாகப் பத்திரப் பதிவு செய்ததாக தென் மண்டல காவல் துறை அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே மோசடியாகப் பத்திரப் பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். என் மீது பொய் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE