கடலூர் | கல்லூரி மாணவியிடம் நூதன முறையில் ரூ.22.50 லட்சம் மோசடி

By செய்திப்பிரிவு

கடலூரில் கல்லூரி மாணவியிடம் நூதன முறையில் ரூ.22 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூரைச் சேர்ந்தவர் ஓய்வுப் பெற்ற ஆசிரியரின் 22 வயது மகள், கல்லூரியில் படித்து வருகிறார். இவர் இணையவழியில் தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இந்நிலையில், அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தபால் வந்துள்ளது. அதில், ரூ.15 லட் சம் மதிப்பிலான கார் பரிசாக விழுந்துள்ளது என்றும் அந்தக் காரை பெறுவதற்கு ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகள் கட்ட வேண்டும் எனவும் தபாலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை நம்பி 4 தவணைகளில் பணம் கட்டியுள்ளார். மீண்டும், அவரைத் தொடர்புக் கொண்டு ரூ.3 லட்சம் கட்டினால் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரும் குடும்பத்தினரின் உதவியுடன் ரூ.3 லட்சம் செலுத்தியுள்ளார்.

பல தவணைகளில் மொத்தமாக ரூ.22.50 லட்சம் பணம் கட்டிய நிலையிலும் கார் கிடைக்காததோடு, திரும்பத்தருவதாகக் கூறிய பணத்தையும் வழங்கவில்லை. இதன் பின்னரே அந்த மாணவி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று கடலூர் இணைய வழி குற்றப்பிரிவு (சைபர் க்ரைம்) போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் ஐயப்பன் ராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE