அருப்புக்கோட்டை இளைஞர் மர்ம மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டையில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அது தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.

அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரில் கடந்த 13-ம் தேதி அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாக செம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் (34) என்பவரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தங்கப்பாண்டியன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் காப்பகத்தில் போலீஸார் சேர்த்தனர்.

பின்னர், இரவு தங்கப்பாண்டியனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவிட்டு மீண்டும் காப்பகத்தில் விட்டுள்ளனர்.

ஆனால், உடல்நிலை பாதிக் கப்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி சேர்க்கப்பட்ட தங்கப்பாண்டியன் திடீரென உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அருப்புக் கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் முத்துஇசக்கி விசாரணை நடத்தினார். அவரது முன்னிலையில் கடந்த 17-ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் தங்கப்பாண் டியனின் உடல் பிரேதப் பரி சோதனை செய்யப்பட்டது.

சடலத்தை பெற்றுக் கொள்ள மறுத்த குடும்பத்தினர், தங்கப்பாண்டியனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பான கோப்புகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திலிருந்து விருதுநகர் சிபிசிஐடி போலீஸாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE