கள்ளக்குறிச்சியில் செய்தியாளர், கேமராமேன் மீது தாக்குதல்: அதிமுக கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது

By வி.சீனிவாசன்

ஆத்தூர்: கள்ளக்குறிச்சியில் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பள்ளியின் சீரமைப்புப் பணி குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர், கேமராமேனை தாக்கியதாக அதிமுக கவுன்சிலர் உள்பட ஐந்து பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவி உயிரிழந்த சம்பவத்தில் கலவரம் ஏற்பட்ட, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பள்ளியில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி மீண்டும் திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனை செய்தி சேகரிக்கவும், புகைப்படம் எடுக்கவும் சென்னையில் இருந்து வார இதழ் (நக்கீரன்) செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் (56) மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் (26) கனியாமூர் பள்ளிக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு காரில் திரும்பினர். அப்போது, அவர்கள் சென்ற காரை, மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் துரத்தி வந்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் செய்தியாளர் சென்ற காரை வழிமறித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தாமோதரன் பிரகாஷ், அஜித்குமாரை தாக்கினர். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் காப்பாற்றி, தலைவாசல் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், படுகாயமடைந்த செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்தார். தலைவாசல் போலீஸார் செய்தியாளர், புகைப்படக்கலைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்டதாக சின்னசேலத்தை சேர்ந்த செல்வராஜ் (36), தீபன் சக்கரவர்த்தி (36), செல்வகுமார் (38), பாலகிருஷ்ணன் (45), கனியாமூர் திருப்பதி நகரை சேர்ந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரன் (44) ஆகிய ஐந்து பேர் மீது கொலை முயற்சி, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்பட எட்டு பிரிவுகளுக்கு கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் ஆத்தூர் ஜேஎம் எண்:2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கனியாமூர் பள்ளி நிர்வாகியின் தம்பி அருள் சுபாஷ், மோகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE